Tuesday, October 11, 2011

குறுதி கொட்டும் செம்மொழி

குறுதி கொட்டும் செம்மொழி
இன்குலாப்


நினைவுப் படலத்தில்
குறுதிக் கொடுகளாய்ப் பதிந்த
கொடிய நாட்கள் அவை.

வானம் மறுக்கப்பட்ட பறவைகளை
நான்கு திசைகளிலிருந்து
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்.

கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக் கொடிகள் படர்ந்த நாட்கள்.

பறவைகளின் நெஞ்Œப் படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்.

வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிட முடியாதென்று,
நாக்கைச் சப்புக் கொட்டிப்
பறவைகளின் பச்சைக்கறி விற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்...

கிளிகளுக்கு இரங்குவதாய்
அமுத பூனை
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுரிக்கும் நேரம்
உண்ணாதிருத்தம்
மாபெரும் போராட்ட நாட்கள்
அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து,
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும் ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?

இந்த நினைவுகள்
விடை வேண்டும் கேள்விகள்.

தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப் பலகையிலிருந்தும்,

விரைந்து விற்றுக் கொண்ட
கலாநிதிகளின்
ஆ#வாழங்களிலிருந்தும்,

அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சோர்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்,

விலகி,
வெகுதொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குறுதி கொட்டும்
செம்மொதுழியாய்..

Monday, March 14, 2011

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி

கவிஞர் இன்குலாப்


நினைவுப் படலத்தில்
குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த
கொடிய நாட்கள் அவை

வானம் மறுக்கப்பட்ட
பறவைகளை
நான்கு திசைகளிலிருந்தும்
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்

கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக்கொடி படர்ந்த நாட்கள்

பறவைகளின் நெஞ்சப்படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்

வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிடமுடியாதென்று
நாக்கைச் சப்புக்கொட்டி
பறவைகளின் பச்சைக் கறிவிற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்.

கிளிகளுக்கு இரங்குவதாய்
அழுத பூனையொன்று
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுரிக்கும் நேரமே
உண்ணாதிருந்த
மாபெரும் போராட்ட நாட்கள்
விட்டுவிடுதலையானவை
சிட்டுக்குருவிகள் என்று
கொண்டாடுவேனோ
இனியும் இங்கே?

ஒரு சிறகில் சுதந்திரமும்
மறு சிறகில் துயரமுமாய்
அலைகின்றனவோ
அனைத்துப் பறவைகளும்?

எத்தனை கூட்டமாய்
எவ்வளவு தூரமாய்
எந்த உயரத்தில் பறந்தாலும்
கடந்த வெளிகளில்
அவற்றின்
சிதைந்த சிறகுகளின்றி
இல்லை
சின்னதொரு தடமும்
என்று நிமிரும் முகத்தில்
கரும்புள்ளியாய்க்கடப்பது
எதன் நிழல்?

கூடும் குஞ்சும்
கொள்ளைபோனபின்பும்
வீழாதமட்டும்
ஓய்வறிவதில்லை
எந்த ஒரு சிறகும்!

உயரமோ தாழ்வோ
துல்லியம் தப்பாத தொலைவோ
மகிழ்ச்சி, காதல்,
அச்சம், துணிச்சல்
சுதந்திரம்,
ஆறாத்துயரம்
இவற்றுடன்
போராட்ட ஞானத்தையும்
போதிக்கின்றனவோ
அசையும் சிறகுகள்
தம்
மௌன மொழிகளில்!;

- – - – -

அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும்
ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?

இவை
விடை வேண்டும் கேள்விகள்

தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப்பலகையிலிருந்தும்

விரைந்து விற்றுக்கொண்ட
கலாநிதிகளின்
ஆய்வாழங்களிலிருந்தும்

அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்

விலகி,
வெகு தொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்….

- கவிஞர் இன்குலாப்

கலகப்பாடலை உழைக்கும் மக்களுக்கு தந்தவர் மக்கள் கவிஞர் இன்குலாப்.

கலகப்பாடலை உழைக்கும் மக்களுக்கு தந்தவர் மக்கள் கவிஞர் இன்குலாப்.

இன்குலாப் இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து கொண்டார். இயற்பெயர் சாகுல் அமீது. ராமநாதபுரம், கீழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த குடும்பத்தி லிருந்தே பாட்டுக்கட்டும் திறனையும், எதிர்ப்புக் குரலையும் ஈர்த்துக் கொண்ட இவரின் முதல் கவிதை முயற்சி 12 வயதில் நிகழ்ந்தது.
தர்க்காவில் 'பேய் ஓட்டுகிறேன்' என்று பெண்களைக் குச்சியால் அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு பொறுக்க முடியாத கணத்தில் முதல் கவிதை கனன்று வெளிப்பட்டது. அது முதல் இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.
சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என சகல தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இவரது குரல் உரத்து ஒலிக்கிறது.
இவரது கவிதைகள் 'ஒவ்வொரு புல்லாய்' எனும் தொகுதியாகவும், கட்டுரைகள் 'ஆனால்' எனும் நூலாகவும், நாடகங்கள் 'குறிஞ்சிப்பாட்டு', 'குரல்கள்' எனும் தொகுதி களாகவும், கதைகளும் குறுநாவலும் 'பாலையில் ஒரு சுனை' எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன. 'பொன்னிக்குருவி' 'புலி நகச் சுவடுகள்' எனும் கவிதை நூல்களும், 'மணிமேகலை' நாடக நூலும் தயாராகி வருகின்றன.
இவரது எழுத்துகளுக்காகக் கிடைத்தது விருதுகளோ பரிசுகளோ அல்ல; அச்சுறுத்தல்களும், நள்ளிரவுக் கைதுகளும் தான். இவரும் தனது படைப்புகளுக்காக எதிர்பார்த்திருப்பது விருது களையோ, பரிசுகளையோ அல்ல; சமூக மாற்றத்தைத்தான்.

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அது தனக்கு அளித்த கலைமாமணி விருதை கவிஞர் இன்குலாப் திருப்பி அனுப்பி விட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு இன்குலாப்புக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை தற்போது தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் இன்குலாப். இதுகுறித்து அவர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகின்றேன்.

தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.

ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கின்றது.

வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக்கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற்கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான்.

1965 இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான்.

இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ். மண்ணில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.

இன்று இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணாநோன்பை மேற்கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும்.

தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்.

இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன.

இந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த் தியாகங்களைப் பொருட்படுத்தாத போது, ராஜபக்சே அளவிலான சிங்கள பாசிச அரசு, கலைஞரின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும்.

இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.

மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது.

இந்த வகையில் 2006 ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட 'கலைமாமணி' விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.

தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது.

அதனால் இம்மடலுடன் எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் திருப்பி அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் இன்குலாப்.